தமிழில்

எனது தமிழ் ஆக்கங்களினை இப் பதிவில் நீங்கள் பார்க்கலாம்... எனது ஏனைய பதிவுகளைப் பார்ப்பதற்கு "View My Complete Profile" இனை அழுத்தி வேண்டிய பதிவினைத் தெரிவு செய்க.

Tuesday, May 01, 2007

விழுத்த விழுத்த எழுவோம்

விழ விழ எழுவோம் என்பது, நம் நாட்டில் இருக்கும் ஒரு நம்பிக்கையினை ஊட்ட கூறப்படும் ஒரு கூற்று. நாம் எவ்வளவு தோல்விகளைச் சந்தித்தாலும் மனஞ் சோர்ந்து போகாது எழுந்து நம் வெற்றிக்காகப் பாடுபடுவோம் என்பது அதன் பொருள். ஈழத்தில், விழ விழ எழுவேம் என்றால், எத்தனை பேரைக் கொன்று குவித்தாலும் நாம் வித்தாக விளைந்து மீண்டும் எமது உரிமைக்காகவும் விடுதலைக்காகவும் போராடுவோம் என்பது பொருள். நான் இங்கு "விழுத்த விழுத்த எழுவோம்" என்று கூறக் காரணம்... மற்றவர்கள் தெரிந்தே எம்மை விழுத்தினாலும் (நாமாக விழாது மற்றவர்களால் விழுத்தப்படுவதாலும்) நாம் மீண்டும் எழுந்து நின்று எமது நோக்கினைச் சென்றடைவோம் என்ற பொருளைக் எடுத்துக் கூறவே.

ஈழத்தில் இருந்து இந்திய இராணுவம் சென்றாலும், தமிழர்களுக்கு நிச்சயமாகத் தெரிந்த ஒரு விடயம் போர் ஓய்ந்து விடப் போவதில்லை; இது இன்னும் ஒரு உத்வேகத்தோடும், அதி கூடிய பாதிப்புடனும் இலங்கை அரசினால் தமிழர்கள் மீது ஏற்படுத்தப்படவுள்ளது என்பதனை தமிழ் மக்கள் அறிந்திருந்தனர். புகையிரதப் பாதை இருந்த இடம் தெரியாது தண்டவாளங்கள், சிலிப்பர் கட்டைகள் (யாருக்காவது இதன் தமிழ் தெரியுமா?? மரக் குற்றிகள் என்பது சரியாக இருக்குமா?), கற்கள் அனைத்தும் பதுங்கு குழிகள் அமைப்பதற்காக எடுக்கப்பட்டன. புகையிரதத் தண்டவாளங்கள் இருந்த இடங்களில் கொஞ்சங் கொஞ்சமாகக் கடைகள் ஆரம்பிக்கப்பட்டன. சில மாதங்களிலேயே அங்கு புகையிரதப் பாதை இருந்ததற்கான அடையாளங்கள் இல்லாமற் போயின.

இக் காலப் பகுதியிலேதான் புலிகள் வீடியோ கொப்பிகளை வெளிவிட ஆரம்பித்ததாக ஞாபகம், அதாவது இவ் வீடியோக்கள் எவ்வாறு சரியான முறையில் பதுங்கு குளிகள் அமைப்பது (ie: T bunker, L bunker, S bunker... ect), எவ்வாறு எறிகணை, குண்டு வீச்சு ஆகியவற்றிலிருந்து மக்கள் தம்மைப் பாதுகாத்துக் கொள்வது, எவ்வாறு சரியான முறையில் விவசாயம் செய்வது போன்ற விடயங்களைப் பாமர மக்களிற்கும் புரியும் படி வீடியோ மூலம் விளங்கப்படுத்தி மக்களிற்கு இது சார்பான அறிவினை ஊட்டும் முறையிலான கல்விகளைப் புகட்டினார்கள். பிற் காலத்தில், 90களில் இயற்கை முறையிலான பசளைகள் தயாரித்தல், எவ்வாறு ஒரு அடுப்பிலிருந்து அதிக பலனைப் பெறலாம்... அதாவது இக் கால கட்டத்தில், முக்கியமாக யாழ்ப்பாணம் மற்றும் அதனை அண்டிய பகுதியில் உள்ளவர்கள் விறகு வாங்கித் தான் சமைப்பார்கள், அத்துடன் இக் காலப் பகுதியில் விறகின் விலை அதிகரித்ததால், எவ்வாறு மரங்களை அதிகம் வெட்டாது, குறைந்த அளவு விறகு மூலம் அடுப்பிலிருந்து அதிக அளவு பலனைப் பெறலாம் என்பதனை "இரட்டைச் சூட்டடுப்பு" மூலம் தமிழீழ பொருண்மிய மேம்பாட்டுக் கழகத்தினர் அறிமுகப்படுத்தினார்கள்... இவ்வடுப்பு இக் காலகட்டத்தில் மிகவும் பிரபல்யமாக இருந்தது. எமது வீட்டில் விறகிற்குப் பஞ்சமில்லாததால் எம் வீட்டில் அதனை யாரும் பயன்படுத்தவில்லை. இவ்வாறு தமிழீழப் பொருண்மிய மேம்பாட்டு நிறுவனத்தினரின் பெருமைகளை வரிசைப்படுத்திக் கொண்டே போகலாம்.

இது வரை காலமும் உலங்கு வானூர்தி (Helicopter) மற்றும் பொம்பர் ஆகியவற்றை மட்டும் கண்ட நாம், இரண்டாங் கட்டப் போர் தொடங்கியதும், புதிது புதிதான ஆகாய விமானங்களைக் கண்டோம்: சகடை, புக்காரா, அஃப்ரோ ஆகிய விமானங்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டோம் பொதுவாக இந்த விமானங்கள், இராணுவத் துருப்புக்களை ஓர் இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்குக் கொண்டு செல்வதற்காகப் பயன்படுத்தப்படும், அத்துடன் இவ் விமானங்கள் பீப்பாக் குண்டுகள் போடுவதற்காக எம்மீது பாவிக்கப்பட்டன. பீப்பாக் குண்டுகள் எனும் பொழுது, அவை இரசாயனம்/ அமிலம் நிறைந்த குண்டுகளாகவோ, அல்லது மலக் கழிவுகள் நிறைந்த குண்டுகளாகவோ இருக்கும். இவ்வகையான குண்டுகள் விழுந்தால், அதனைச் சுவாசிப்பவர்கள் கொடிய நோய் வாய்ப்பட்டு அவதிப்படுவார்கள். அத்துடன் இவ்வகைக் குண்டுகள் சுற்றம், சுற்றாடலை மாசுபடுத்துபவையாகவும் இருந்தன.

அனேகமான நாட்களில், நான் காலை 5மணி அளவில் எழுந்து, ரியூசனுக்குச் சென்று பின்னர் வீடுவந்து வெளிக்கிட்டுப் பாடசாலை செல்வேன். பாடசாலை முடிந்ததும் நாம் மீண்டும் ரியூசன்சென்று மாலை 6 மணி முன்பு வீடு வந்து சேர்வோம். வீட்டிற்கு மாலை 6 மணிக்கு முன்னர் வராது விடின் வீடு வரும்போது, வீட்டார் அனைவரும் தெரு வாசலில் நின்று எப்பொழுது வீடு வந்து சேர்வான் எமது பையன் என்று பார்த்தவாறு நிற்பார்கள். எங்காவது செல்ல வேண்டும் எனின் வீட்டாருக்கு எங்கு செல்கிறோம், எப்பொழுது வருவோம் என்பதனைக் கூறியே செல்ல வேண்டும். சொல்லாமல் சென்றாலோ அல்லது வீட்டிற்கு நேரந் தாழ்த்தியோ வந்தால், நல்ல டோஸ் (ஏச்சு) விழும் (சிறு வயதில் அடி விழும்). இது பொதுவாகவே அனைத்துத் தமிழர்கள் வீட்டிலும் நடக்கும் விடயங்கள். ஏன் எனின், போர்ச் சூழலில் எது எப்பொழுது நடக்குமோ என்ற பயமும், வீட்டில் வந்து எப்பொழுதும் படித்தபடியே தம் பிள்ளைகள் இருக்க வேண்டும் என்ற எண்ணமும் ஆகும். தமிழர்களாகிய நாம் நன்கு கல்வி கற்கா விடின் நல்ல ஒரு உத்தியோகமோ, அல்லது பல்கலைக் கழகமோ செல்ல முடியாது என்பதே அதற்குக் காரணமாகும்.

இதனையே வைத்தியக் கலாநிதி. பிரையன் செனவிரட்ன (Dr. Brian Senaviratne`) தனது கட்டுரை ஒன்றில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்:
“The Tamil students received two serious blows. The Sinhala Only act of 1956 made it difficult for them to secure employment. A policy of standardisation made it much more difficult to get admission to a university. In the original form in 1971, discrimination was on the basis of language and the region the student came from. The system that has prevailed since 1977 is as follows: 30% are filled on island-wide merit; 55% by allocation to revenue districts in proportion to their population, and filled within each district on merit; 15% are given to districts deemed educationally underprivileged. How this operated against Tamil students can bee seen from the following quotation” 1 - Brian Senewiratne: Sri Lanka, A Synopsis Of the Racial Problem", p 3
“Students in the North (almost certainly Tamils) and those in Colombo (two-thirds Sinhalese and one-third Tamils) continue to suffer serious discriminations. In 1983/4, 530 students who had the necessary grades for admission to the Faculties of Medicine, Science and Engineering were excluded, to accommodate 519 who had lesser marks. Of the excluded students, over 50% were Tamils." 1 - Brian Senewiratne: Sri Lanka, A Synopsis Of the Racial Problem", p 3
Such discrimination contradicts U.N policy.Article 26.1 of the Universal Declaration of Human Rights states: "Every one has the right to education - higher education shall be equally accessible to all on the basis of merit."

நாம் கல்வி கற்ற பாடசாலைகளில், எந்தவகையான ஒரு தளபாடங்களோ, அல்லது உபகரணங்களோ அரசாங்கத்தினால் வளங்கப்படவில்லை. உதாரணத்திற்கு: விஞ்ஞான ஆய்வு கூடத்தில், அனேகமான இரசாயனப் பொருட்களோ, உபகரணங்களோ இருக்காது. ஆகவே நாம் பொட்டாசியம் எவ்வாறு இருக்கும் என்பதனையோ, அல்லது நைதரசன் எவ்வாறு இருக்கும் என்பதனையோ அறியவேண்டும் எனின் பாடப் புத்தகத்தின் மூலமாகத் தான் அறியக் கூடியதாக இருந்தது. செய் முறையினூடான அறிவு எமக்கு இருக்கவில்லை, பாடப் புத்தகத்திலிருந்து பாடமாக்கியே நாம் ஒவ்வொன்றையும் பரீட்சையில் எழுத வேண்டி இருந்தன. எம்மைக் கல்வி அறிவு அற்றவர்களாக்க அரசாங்கம் செய்த சூழ்ச்சி, அவர்களின் இச் செயல் மூலமாகத் தோல்வியையே கண்டது.

இதனை இங்கு எழுதும் பொழுது எனக்குச் சிறு வயதில் எனது தந்தை ஒரு முறை கூறிய கதை ஒன்று தான் ஞாபகத்திற்கு வருகின்றது. " ஒரு ஊரில் ஒரு அனாதை ஏழைச் சிறுவன் இருந்தான், அவனை ஒருவர் தனது வீட்டில் வேலைக்காக அமர்த்தினார், சிறுவன் வேண்டுகோளிற் கிணங்கிச் சம்பளம் கொடுப்பதற்குப் பதிலாக அவர் சிறுவனைப் பாடசாலையிற் சேர்த்தார். மகா கஞ்சனான அந்த பணக்காரர் தனது மகனுக்கு அனைத்து வசதிகளும் செய்து பள்ளி அனுப்பி வைப்பார், ஆனால் அந்த ஏழைச் சிறுவனுக்கோ ஒரு மாதத்திற்கு ஒரு தாளும் (பேப்பர்) ஒரு அழியும் (ரப்பர்/ இரேசர்) ஒரு பென்சிலுமே கொடுத்து விடுவார். ஆகவே அந்த ஏழைச் சிறுவனுக்கு அன்று படிக்கும் விடயங்களை உடனுக்குடனேயே படித்து ஞாபகத்தில் வைத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அந்தப் பணக்காரனின் மகனோ வீட்டில் கொப்பிகளை அடுக்கி வைத்து விட்டு தவணைக் கடைசியில் படிக்கலாம் என்று எண்ணி, பரீட்சை வந்த பொழுது அனைத்தையும் கற்கமுடியாமலும், உள் வாங்க முடியாமலும் பரீட்சையில் சித்தி எய்தவில்லை. ஆனால் ஏழைச் சிறுவனோ அனைத்துப் பாடங்களையும் படித்துத் தெரிந்திருந்ததால், ஒவ்வொரு பாடங்களுக்கும் முளுப் புள்ளிகளையும் பெற்றுச் சித்தி எய்தினான்.

இவ்வாறே குப்பி விளக்கிலும், சீரற்ற நிலையிலும் இருந்த போர்ச் சூழலில் நாம் கல்வியைக் கற்றோம். எத்தனை பொருளாதாரத் தடைகளை அரசு ஏற்படுத்திய பொழுதும் நாம் அதற்காக புதிய ஒன்றைக் கண்டு பிடித்தோம், கண்டு பிடித்து தடை செய்த பொருளிற்குப் பிரதியீட்டுப் பொருளாக உபயோகித்தோம். இவ்வாறு எமது வாழ்வானது இருட்டினில் தள்ளப்பட்டு பதுங்கு குழிக்குள் வைத்துப் பதுக்கப்பட்ட பொழுதும் எமது தன் நம்பிக்கையினாலும், சுய முயற்சியினாலும் எம்மால் மீண்டும் மீண்டும் எழுந்து இவ் உலகில் நாமும் சுதந்திரத்துடனும், கல்வி மான்களாகவும் வாழ்ந்து காட்டுவோம் என்பதில் உறுதி குலையாமல் இருக்கக் கூடியதாக இருந்தது. இதனை நாம் நிரூபித்துங் காட்டினோம். யாழ் மாவட்டம், இலங்கையில் எவ்வளவு பிரச்சனைகள் வந்த போதும் கல்வியில் முன்னிலையிலேயே இருந்தது. இவ்வாறு தமிழ் மக்களாகிய நாம் இன்னும் விழுத்தப் பட்டுக் கொண்டு இருப்பினும், விழுத்த விழுத்த நாம் எழுந்து கொண்டே இருப்போம்... விழுதுகள் விட்டு.

0 Comments:

Post a Comment

<< Home